• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக வடமொழிப் பாடல் மத்திய அரசின் ஐஐடி அக்கிரமம் – வைகோ கடும் கண்டனம்

February 26, 2018 தண்டோரா குழு

சென்னை ஐஐடி  நடந்த மத்திய அரசு விழாவில் சமஸ்கிருதத்தில்  ‘மகா கணபதி’ பாடல் ஒலிபரப்பு செய்யபட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்டணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைக் காஞ்சி மடாதிபதி அவமதித்ததால் தமிழர்களின் மனதில் ஏற்பட்ட புண் ஆறுவதற்கு உள்ளாக, அந்தப் புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பதைப் போல இன்று 26.2.2018, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன் இராதாகிருஷ்ணனும் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தே பாடாமல், ‘ஓம் கணபதி’ என்று தொடங்கும் மதப் பாடலை வடமொழியில் பாடியுள்ளனர்.

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தின் மேலாண்மையைத் திணிப்பதற்கு, சங் பரிவார் வகுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசாக, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு அக்கிரமம் செய்து வருகின்றது. அதற்காக, அனைத்துத் துறைகளிலும் இந்தியைத் திணித்து, செத்துப் போன வடமொழியான சமற்கிருதத்திற்கு மகுடம் சூட்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு இருக்கின்றது. அதன் ஒரு கட்டம்தான், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக வடமொழிப் பாடலைப் பாடியதாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தழைத்துச் செழித்த உலகத்தின் தொன்மையான செவ்வியல் மொழியான தமிழை, தமிழ்த்தாய் வணக்கத்தைப் புறக்கணித்து அவமதிக்கும் துணிச்சல் ஐஐடிக்கு எப்படி ஏற்பட்டது? மத்திய அரசின் வடமொழித் திணிப்பு வெறியும், ஆணவமும், அகம்பாவமும், திமிரும்தான் இதற்குக் காரணம். ஐஐடி நிகழ்வு, தமிழர்களின் தன்மானத்திற்கும், தமிழ் மொழியின் மாண்புக்கும் விடப்பட்ட அறைகூவல் ஆகும். தமிழகத்தின் தலைநகரிலேயே தமிழைப் புறக்கணித்து, வடமொழிப் பாடலைத் திணித்தது எவ்விதத்திலும் மன்னிக்கக்கூடியது அல்ல. இதற்குப் பொறுப்பான  ஐஐடி நிர்வாகிகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அண்மைக்காலமாக சென்னை வானொலியில் ஒலிபரப்பாகின்ற தமிழ்ப்பாடல்களுக்கு இடையே, மத்திய அரசு விளம்பரங்களை இந்தி மொழியில் மட்டுமே சொல்கின்றார்கள். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும், இந்தி மற்றும் வடமொழிப் பெயர்களையே சூட்டி வருகின்றார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் சமஸ்கிருதத்தைப் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை இருந்தது. அந்த அநீதியை, நீதிக்கட்சி அரசு ஒழித்துக்கட்டி, தமிழுக்கு உரிய இடம் தந்தது. இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் தமிழகத்தில் இந்தி மற்றும் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திரு வி.க., தேவநேயப் பாவாணர், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள்  எதிர்த்துப் போராடினர்.

இந்தி எதிர்ப்பு அறப்போரில், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில்  எண்ணற்ற தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு, எட்டுத் தமிழ் இளைஞர்கள் தீக்குளித்த மடிந்த தியாக பூமியான தமிழ்நாட்டில், இந்தியை, வடமொழியைத் திணிக்க முற்படுகின்ற மத்திய அரசை எதிர்த்துப் பலமுனைகளிலும் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது என்பதைப் போல, நம் உச்சந்தலையிலேயே ஏறி மிதிக்கலாம் என்ற இந்துத்துவ வெறிப்போக்குக்கு எதிராக தன்மானத் தமிழர்கள் அனைவரும் வெகுண்டு எழ வேண்டிய நேரம் இது.   உறங்கும் புலியை இடற வேண்டாம் என மத்திய அரசை எச்சரிக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க