July 10, 2018
தண்டோரா குழு
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,”நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது,அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன.இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால்,தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே,மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும்,நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இம்மனு நீதிபதிகள் சி.டி.செல்வம்,ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம்,பசீர் அகமது ஆகியோர் சிபிஎஸ்இக்கு 4 வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,எம்பிபிஎஸ் படிப்பில் சேர புதிய தரவரிசை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும் என CBSE-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.அதைப்போல் புதிய தர வரிசை பட்டியலை வெளியிடும் வரை MBBS கவுன்சிலிடிங்கை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.