January 31, 2018
தண்டோரா குழு
தமிழக முதல்வரை சந்திப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பல்லாண்டு காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை முடித்து, 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 9-ந் தேதி அறிவித்தது.
இதற்கிடையில், டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நாள் மற்றும் நேரம் ஒதுக்க, முதலமைச்சர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா,
காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒருவாரத்திற்கு பிறகு முடிவு செய்யபடும். கர்நாடக மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதால், ஒரு வாரத்திற்கு பிறகு, பழனிசாமியை சந்திப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.