August 14, 2021
தண்டோரா குழு
திமுக ஆட்சி அமைந்த பின் தமிழக அரசின் காகிதமில்லா முதல் பட்ஜெட் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து கோவையை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன் கூறியிருப்பதாவது:
இந்த பட்ஜெட்டில் ஜவுளி தொழிலுக்கென பிரத்யேக துறையை அமைப்பதாக கூறியுள்ளது இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும். ஜவுளி பூங்காக்கள் ஏற்படுத்துவதும், சிப்காட் வசதிகளை மேம்படுத்துவது போன்ற அறிவிப்புகள் ஜவுளி துறையின் அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்பது, அப்பகுதிகளில் உள்ள துணி பதனிடும் ஆலைகளுக்கும், அதனை சார்ந்த பல்வேறு ஆலைகளுக்கும் பயனளிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை கிளை) தலைவர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
கோவையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் ரூ.225 கோடியில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா, நீண்ட நாள் கோரிக்கையான கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கம், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு, வரி முறையை சீர்செய்ய திட்டம், பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு, 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறோம். இந்த பட்ஜெட்டை இந்திய தொழில் வர்த்தக சபை வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வீ.கார்த்திக் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டைகள் மேம்பாடு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தொழில் துறைக்கு சாதகமான அம்சங்களை தமிழக பட்ஜெட் அறிக்கையில் காண முடிகிறது. இது வரவேற்புக்குரிய பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியிருப்பதாவது:
வரிகள் உயர்த்தப்படாமல், பெட்ரோல் மீதான வரி குறைப்பு, கோவையில் 500 ஏக்கரில் ரூ.225 கோடி மதிப்பில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி பூங்கா அமைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி பூங்கா மூலமாக ரூ.3 ஆயிரம் கோடி வரையிலான முதலீட்டை எதிர்பார்க்கலாம். இவை தவிர, தமிழகத்தில் 9 இடங்களில் 4500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கி சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கான அறிவிப்பு, மின் வாகன உற்பத்தி பூங்காவுக்கான அறிவிப்புகளும் வரவேற்புக்குரியவை. அதே நேரத்தில் கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. தமிழக அரசு விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்க (கொசிமா) தலைவர் நல்லதம்பி கூறியிருப்பதாவது:
சிறு குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக, குடியிருப்புகள் கட்டி தரப்படும். தமிழகத்தில் 9 இடங்களில் 4,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் சிப்காட் தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும். கோவை மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்க ரூ.225 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகரத்திற்கு இந்த நிதியாண்டிலேயே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் (கோப்மா) சங்க தலைவர் கே.மணிராஜ் கூறியிருப்பதாவது:
கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பது, புதிய பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்படுத்துவது, தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை, புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் தொழிற்பேட்டைகளில் 4.0 எனும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. கோவையில் இலவச பம்புசெட்டு பரிசோதனைக் கூடம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் (காட்மா) சங்க தலைவர் சிவக்குமார்:
15 அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில் ரூ.60 கோடியில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைப்பது, கோவையில் தமிழக அரசின் நிதி உதவியுடன் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.இதேபோல் 10 எச்.பி.க்கு குறைவாக மின் இணைப்பு பெற்றுள்ள குறுந்தொழில் கூடங்களுக்கு தற்போது வழங்கப்படும் 3பி பிரிவிற்கு பதிலாக, 3ஏ1 பிரிவில் விரைவில் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும், குறுந்தொழில்களுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.