March 11, 2020
தண்டோரா குழு
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்ட விவகாரத்தில், என்ஐஏ விசாரணை வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில், அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்து முன்னணி அமைதியை விரும்புகிறது. கோவையில் இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் வீடு, அலுவலகங்கள், கார் உள்ளிட்டவை தாக்கப்பட்டுள்ளன. ஆனால் காவல் துறை ஒரு குற்றவாளியையும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் காவல் துறை மீது இந்து முன்னணி நம்பிக்கை இழந்துள்ளது.
வன்முறையை தூண்ட வேண்டுமென முஸ்லிம்கள் போராட்டங்கள், தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் ஏப்ரல் மாதம் பேரணி நடத்தப்படும். சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் இஸ்லாமியர்களை தூண்டி விடுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சிஏஏ எதிர்ப்பில் வெளிநாட்டு சதி உள்ளது எனவும்,தொடர்ந்து ஸ்டாலின் முஸ்லிம்களை தூண்டி விட்டால் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார் எனவும் அவர் தெரிவித்தார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்ட விவகாரத்தில், என்ஐஏ விசாரணை வேண்டும் எனவும், தமிழக தீவிரவாதிகள் சிரியாவில் பயிற்சி எடுக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.