April 2, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் இன்று இரவு டெல்லி செல்லவுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது.ஆனால் கர்நாடக அரசோ, ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? அமைக்கப்படாதா? என்பது பற்றி மத்திய அரசு எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.
இதையடுத்து, காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மத்திய அரசின் அவசர அழைப்பின் பெயரில் இன்று இரவு 7:10 விமானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்லவுள்ளார்.