February 27, 2018
ஆழியார் பிரச்சனையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு சுமூக முறையில் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி செயின் அணிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சிறுவாணியில் கேரளா அரசு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தமிழக முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறிய அவர், விலங்குகளின் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் ஆழியாரில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கும் சிறுவாணி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்ட அவர், அரசியல் காரணமாக இந்த இரண்டு விவகாரங்களையும் இணைத்து பேசுவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆழியார் பிரச்சனையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சுமூக முறையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.