December 16, 2020
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளுக்கும், ஜி.பி.எஸ் கருவிகளுக்கும் அனுமதி அளித்தல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தல், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடர்ர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் தயாரிக்கும் 49 நிறுவனங்களுக்கு அப்ரூவல் உள்ளது. ஆனால், வெறும் 12 நிறுவனங்களுக்கு மட்டும் தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வாகன உரிமை புதுப்பித்தலை அனைத்து பகுதிகளிலும் செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுத்தல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம்.இதுகுறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 4.5 லட்சம் கனரக வாகனங்கள், 6 லட்சம் சிறிய வாகனங்கள் கலந்து கொள்கின்றன. வரும் 27ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு லாரியும் இயங்காது. இதில் மருந்து, பால் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் மட்டும் இயங்கும்.இதன் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.போக்குவரத்து துறையில் அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெற்று வருகின்றனர். சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் சோதனை நடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்தது எங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில செயலாளர் மாங்கிளி, பொருளாளர் தன்ராஜ், உதவித் தலைவர் ராஜூ, கோவை மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.