February 19, 2018
தண்டோரா குழு
தமிழகம் ஒடுக்கப்படும் மாநிலம் என்பதற்கு காவிரி தீர்ப்பு மற்றொரு உதாரணம் என்று இயக்குனர் ராஜூமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் தமிழகம் ஒடுக்கப்படும் மாநிலம் என்பதற்கு காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றொரு உதாரணம் என ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் குறிப்பிட்ட தூரத்தில் தேர்தல் இல்லாததாலும், தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளதால் இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு எதிரான தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் என்று கடுமையாக விமர்சித்தவர், இந்தியாவில் வெளிவரும் தீர்ப்புகள் அரசியல் காரணங்களின் அடிப்படையிலும், அதிகார அழுத்தத்தினால் தரப்படுவதாக தான் நம்புவதாக தெரிவித்தார்.
உரிமைகள் குறித்து தீவிரமாக குரல் கொடுக்க வேண்டிய தலைமை தற்போது தமிழகத்தில் இல்லை என்றும், உளவியல் ரீதியாக அச்ச உணர்வை தமிழக மக்களிடையே தமிழக அரசு கொடுத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியாவை தூக்கி பிடிப்பவர்கள் தான் சாதிய, மதவாதத்தை தூக்கி பிடிப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விஷம் போல் சாதி, மதம் பரப்பப்பட்டு வருவதாக கூறியவர், சாதிய அமைப்புகளும், அதிகார அரசியல் அமைப்புகளும் தான் சாதி ஆணவ கொலைகளை நடத்துவதாகவும், மக்கள் மத்தியில் சாதி, மதத்தை பரப்புவதாகவும், சாதிய, ஆணவக் கொலைகள் தொடர்பாக இந்திய அளவில் திரைப்படங்கள் வர தொடங்கியுள்ளது ஆரோக்கியமானது என்றார்.
மேலும், நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், நல்லக்கண்ணு போன்ற அடிப்படையில் தீவிரமாக மக்கள் மீது நேசம் கொண்ட தலைவர்கள் தான் தமிழகத்திற்கு தேவை என்று பதிலளித்தார்.