March 29, 2020
தண்டோரா குழு
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர், அவரது குழந்தை, அவரது தாயார் மற்றும் அவர் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த ஈரோடு ரயில்வே பணியாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அப்பணியாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அப்பெண் மருத்துவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவருக்கும் மருத்துவரின் நெருங்கிய தொடர்புள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்தநிலையில் தற்போது வெளியான முடிவில் 29 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மருத்துவர், 51 வயது மதிக்கத்தக்க மருத்துவரின் தாயார், மருத்துவரின் 10 மாத குழந்தை, 58 வயது மதிக்கத்தக்க மருத்துவரின் வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளர் என மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
அதேபோல மருத்துவரின் கணவர் மற்றும் 2 வயது ஆண் குழந்தைக்கான பரிசோதனை முடிவுகளுக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் காத்திருக்கின்றனர்.தற்போது கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று வார்டில் மொத்தம் ஒன்பது பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.