December 16, 2020
தண்டோரா குழு
பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு, பாதுகாப்பிற்கென 143 பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்பினர் இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த 143 சமுதாய மக்களை ஒன்றைனைத்து பிற்படுத்தப்பட்டோர் அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதில், முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்கஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் முதன் முறையாக துவங்கியுள்ள இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.
அப்போது கூட்டமைப்பை சேர்ந்தவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ரத்தினசபாபதி பேசுகையில்,
தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ள நிலையில்,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அவர்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த அமைப்பும் இழந்த உரிமையை மீட்டெடுக்க குரலை உயர்த்தவில்லை. இதனால் தான் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சார்பு இல்லாமல், 143 சமுதாயத்தின் ஒரே குரலாகத்தான் இந்த அமைப்பு இருக்கும். எவ்வித கருத்து வேற்றுமைக்கும் இடமின்றி பிற்படுத்தப்பட்டோரின்,இட ஒதுக்கீடு மற்றும் நலன் சார்ந்து மட்டுமே செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும்,பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து வரும் 18ம் தேதி கோவையில் மாபெரும் ஒன்றிணைவு கூட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பிற்படுத்தப்பட்டோர் அனைத்து சமூக அமைப்பை சேர்ந்த பல்வேறு துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் வெள்ளியங்கிரி, ஜனகராஜன், சுந்தராஜன், தம்பு மற்றும் வழக்கறிஞர்கள் அருணாச்சலம், ஞானசம்மந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.