May 23, 2018
தண்டோரா குழு
போராட்டம்,வன்முறை தொடர்பான தகவல்கள்வாட்ஸ் அப்,பேஸ்புக் மூலம் பரவுவதை தடுக்க தூத்துக்குடி,நெல்லை,குமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.60 – க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில்,இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.அதில் ஒருவர் பலியானார்.5 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் போராட்டம்,வன்முறை தொடர்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செய்திகள் பரவுவதை தடுக்க தூத்துக்குடி,குமரி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.