January 20, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற முடியாது என்று போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
நிதிச்சுமை காரணமாகவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்குப் பின்பும் அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது.கட்டணத்தை உயர்த்தியும் போக்குவரத்து துறைக்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும்,பேருந்து கட்டண உயர்வு தொடர்பான, அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும்.போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படாது என்றும்,அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.