April 30, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி
172 இடங்களை கைப்பற்றும் – ஏபிபி நாடு – சிவோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை ஏபிபி நாடு மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நேற்று (ஏப்ரல் 29) வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 46.7 சதவீத வாக்குகளை பெற்று 160 முதல் 172 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் அண்ணா தி.மு.க. கூட்டணி 35 சதவீத வாக்குகளை பெற்று 58 முதல் 70 இடங்களை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. இதர கட்சிகள் 10.4 சதவீத வாக்குகளை பெற்று 3 இடங்களை வரை கைப்பற்றக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரி கட்சிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, ஆளும் இடதுசாரி கட்சி கேரளாவில் தெற்கு பகுதியில் அதிக இடங்களில் வென்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
கேரளாவில் இடதுசாரி கட்சி 42.8 சதவீத வாக்குகள் பெற்று 71 முதல் 77 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 41.4 சதவீதம் வாக்குகளை பெற்று 2வது இடம் பிடித்து 62 முதல் 68 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பாரதீய ஜனதா வெறும் 13.7 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று 2 இடங்களில் மட்டும் வெல்லும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மாவட்ட அளவில் வட கேரளாவை பொறுத்தவரை இடதுசாரி கட்சியும் காங்கிரஸ் கூட்டணி கட்சியும் தங்களுக்கான இடங்களை தக்க வைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. வட கேரளாவை பொறுத்தவரை இடதுசாரிகள் 34 முதல் 36 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 24 முதல் 26 இடங்களிலும் தெற்கு கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரிகள் 21 முதல் 23 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 15 முதல் 17 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் மத்திய கேரளாவில் இடதுசாரிகள் 16 முதல் 18 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 23 முதல் 25 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரை என்ஆர் காங்கிரஸ்+பாரதிய ஜனதா மற்றும் அண்ணா தி.மு.க. கூட்டணி 47.1 சதவீத வாக்குகளை பெற்று 19 முதல் 23 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி 34.2 சதவீத வாக்குகளை பெற்று 6 முதல் 10 இந்த கருத்து கணிப்பு தமிழகத்தை பொறுத்தவரை 43630 பேரிடமும் கேரளாவில் 26447 பேரிடமும் புதுச்சேரியில் 5003 பேரிடமும் மேற்குவங்கத்தில் 85 ஆயிரம் பேரிடமும் தேர்தல் முடிந்த பின் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு சிறு பிழைகளுக்கு உட்பட்டவையாகும். இதிலிருந்து 3 சதவீதம் பிளஸ் ஆகவோ அல்லது மைனஸ் ஆகவோ அல்லது 5 சதவீதம் பிளஸ் ஆகவோ அல்லது மைனஸ் ஆகவோ இருக்க வாய்ப்பு உள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.