January 4, 2021
தண்டோரா குழு
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.எனினும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் திரையரங்கிற்கு மக்கள் வருகை குறைந்தது.இதையடுத்து, 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோரும் முதல்வர் பழனிசாமியிடம் இதே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.காட்சி நேரத்தில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களும் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.