April 3, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது கட்டத்தில் தான் உள்ளது பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் நேற்று வரை 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்றுமேலும் 102 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 – ஆக உயர்ந்துள்ளது. சமூக தொற்றா கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக சென்று கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நிலையும் சீராக இருக்கிறது.இதுவரை டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 364 பேருக்கு கொரோனா உறுதியானது.
டெல்லியில் இருந்து வந்தவர்களில் இதுவரை 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர் விரும்பினால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தனியார் மருத்துவமனையில் 4 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரமான நுரையீரல் தொற்று இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.