January 27, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இதுமாட்டுமின்றி கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உலகளவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்நாட்டு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து இன்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.இந்தியாவில் கரோனா வைரஸ் குறித்த எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் 3 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறையும் தினந்தோறும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. கரோனா வைரஸ் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முழு கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார். மேலும், கரோனா வைரஸ் என்பது சுவாசிப்பதன் மூலமாக தான் பரவுகிறது என குறிப்பிட்டார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் சுவாச குழாயினுள் புகுந்து, சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். இது சில நாட்களில் உயிரையும் பறிக்கும் அளவு வீரியம் வாய்ந்ததாக உள்ளது என சீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.