February 6, 2018
தண்டோரா குழு
தமிழக கோவில்களில் இருக்கும் தீத்தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் கலாம் அசாத் சுல்தான் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” கோவில்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் மையங்களாக திகழ்பவை.
பரதம், கர்நாடக இசை, களரி போன்ற கலைகள் கோவில்களிலேயே வளர்ச்சி பெற்றன. புர்ட்டன் ஸ்டெயின் எனும் அமெரிக்க வரலாற்றாளர், இந்திய கோவில்கள் மத வளர்ச்சியோடு, நீர்ப்பாசனம், பேரிடர் கால மீட்பு, கலை, கலாச்சார வளர்ச்சி ஆகியவற்றுக்கும் மையமாக திகழ்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
அது போலவே கோவில்களிலும் ஏழைகளுக்கு பணி வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், மக்கள் கூடி தங்கள் முன்னேற்ற திட்டங்களை பகிர்ந்து கொள்ளவும், கலை வளர்ச்சிக்கும் உதவுமிடமாக அமைந்திருந்துள்ளன.
அதனடிப்படையில் நகரின் மையங்களில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில்களின் பராமரிப்பிற்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலமும், பக்தர்கள் தரும் காணிக்கைகள் மூலமும் கோவில்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.
தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில், பழமையும், தொல்லியல் சிறப்பும் கொண்ட 30 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஆனால் அவை தற்போது வருவாய் மூலங்களாக பார்க்கப்படுகின்றனவே அன்றி, முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்களை பராமரிப்பது மாநில அரசின் முதன்மை பொறுப்பு.
ஆனால் அவற்றை பாதுகாப்பதை விடுத்து வருவாயின் மூலங்களாக மட்டுமே பார்க்கின்றனர். சமீபத்தில் மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த விபத்து பக்தர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியது. கோவில்களை வர்த்தக நோக்கில் பார்க்கும் போது, 100 ஆண்டு , 1000 ஆண்டு பழமையையை கருத்தில் கொள்ளாமல் அதன் உள்கட்டமைப்புகளில் பல மாற்றங்களைக் கொணர்கின்றனர்.
அந்த பழமைகள் யாவும் பெருமையுடன் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. உயர்ரக கோவில்களில் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. ஆனால் கோவில்கள் ஏற்கனவே முறையான காற்றோட்ட வசதிக்கு ஏற்ற வகையில் உயர்ந்த சீலிங்குகள் மற்றும் வெப்பநிலையை சமப்படுத்தும் வகையிலேயே ஆகம விதிப்படி கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் வர்த்தக நோக்கங்களுக்காக கோவிலின் பழமையான கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது. மின் இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன. அவையே மீனாட்சியம்மன் கோவில் தஞ்சை கோவி ல் உட்பட சில கோவில்களில் ஏற்பட்ட தீ விப்த்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.
பெரும்பாலானவை கோவில்களின் உள்ளிருக்கும் கடைகளில் ஏற்பட்ட மின்கசிவால் ஏற்பட்ட விபத்துக்களே. மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு அதன் நிர்வாக அலுவலரே முழுபொறுப்பு.பக்தர்கள் முழுமையாக சோதநைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒரு சில அதிகாரிகளின் கார்கள் பக்தர்களின் மனத்தை புண்படுத்தும் வகையில் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. ஆகவே,” நமது பழமை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளங்களாக திகழும் கோவில்களின் பழமையை பாதுகாக்கவும், அவற்றின் உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்வதைத் தடுக்கவும், கோவில்களில் கடைகள் வைக்க அனுமதி மறுத்தும் உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக கோவில்களில் செய்யப்பட்டிருக்கும் தீத்தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்து அறநிலையத்துறை செயலர் நிலையறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், டிஜிபி, தீயணைப்புத்துறை, மத்திய தொல்லியல்துறை, தமிழக சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையை நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டு, அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.