June 29, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுநர் தேர்வுமுறைக்கு பதில் ஹெச்.டிரால் என்ற மின்னணு தேர்வு முறையை எதிர்த்து தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஊழல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதிற்கில்லை என நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும்,வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.எவ்வித குறைப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.சிசிடிவி கேமராக்களை 3 மாதங்களில் பொருத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம்,ஊழலை,தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து,தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.