April 10, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று நோய் மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911ஆக அதிகரித்தது.தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியான 5 பேர் மூலமாக 72 பேருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. தூத்துக்குடியில் இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது கட்டத்திலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் கட்டத்திற்கு சென்று விடக் கூடாது என்பதற்காக கடும் முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கொரோனா நோய் தாக்கம் கட்டுக்குள் வராமல் ஊரடங்கை தளர்த்தினால், இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் இல்லை என மருத்துவர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது. நாளை முதல்வரின் பிரதமருடனான காணொளிக் காட்சி ஆலோசனை, அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முடிவு செய்யப்படும்.90% குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது.வீட்டிற்கு நேரடியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.