August 25, 2018
தண்டோரா குழு
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது, நடப்பாண்டில் தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டில் ஒரே ஒரு ஆசிரியர் பெயர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நடப்பாண்டில் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த ஸதி ((Sathy)) என்பவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
இது குறித்து ஆசிரியர் ஸதி கூறுகையில்,
மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறோம். மலுமிச்சம்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட்சிட்டி வகுப்பறைகள் உள்ளன. அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.