June 29, 2017
தண்டோரா குழு
ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது மற்றும் ஏர் இந்தியாவினன் 60 சதவீத பங்குகள் விற்பது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.இதனால் தனியார் மயமாக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையில் ஏர் இந்தியாவின் கடன் 22,000 கோடியாக உயர்ந்ததால் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அருண் ஜெட்லீ தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர் இந்தியா பங்குகளை விற்பது மற்றும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு பங்குகளை விற்பதற்கான காலத்தையும், வழிமுறைகளையும் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவியுடன் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.