June 4, 2021
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தினை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நோயாளிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் 2 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 4 அரசு மருத்துவமனைகள்,93 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் 13 சிறப்பு சிகிச்சை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அதன்படி நாளொன்றுக்கு மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.20 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ3 முதல் ஏ6 வரையுள்ள மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.18.5 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.36.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிக்கு வெளியிலுள்ள மருத்துவமனைகளில் ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.15 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ3 முதல் ஏ6 வரையுள்ள மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.13.5 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.31.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது காப்பீடு மற்றும் காப்பீடு அல்லாத அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெறும் நோயாளிகளிடம் மருத்துவமனை சார்பில் எந்தவொரு கட்டணமும் பெறக் கூடாது.
மேற்கூறிய கட்டணங்கள் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியறை, கூடுதல் வசதிகளுடன் உள்ள அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். மாநகராட்சிப் பகுதியிலுள்ள ஏ1, ஏ2 தர மருத்துவமனைகள் காப்பீடு இல்லாத பயனாளிகளிடம் ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கலாம்.
இவ்வாறு அரசு அறிவித்துள்ள தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கபடும். மேலும் பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள பொள்ளாச்சி சப் – கலெக்டர் வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா வைரஸ் தொற்று சிறப்பு கட்டளை மையத்தினை 1077 என்ற எண்ணிலோ, 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலோ, 9488440322 என்ற எண்ணிற்கு வாட்ச் ஆப் செயலி மூலமாகவோ அல்லது [email protected] மின்னஞ்சல் மூலமாகவோ புகார் அளித்தால், புகார் தக்க முறையில் விசாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.