February 26, 2026
தண்டோரா குழு
தஞ்சாவூரிலுள்ள மீனாட்சி மருத்துவமனையில் அதிநவீன யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி (UBE) முறையின் மூலம் 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு வெற்றிகரமாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து, அவரின் நடமாட்டத்திறன் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
முதுகுத்தண்டு வட்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக, நரம்புகள் கடுமையாக அழுத்தமடைந்து ‘Cauda Equina Syndrome’ எனப்படும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனால் கடுமையான வலி மற்றும் நடப்பதில் சிரமம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Unilateral Biportal Endoscopic (UBE) Surgery என்பது குறைந்த ஊடுருவலுடன் செய்யப்படும் நவீன முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை முறை.1 செ.மீக்கும் குறைவான இரண்டு சிறிய துளைகள் மூலம், எண்டோஸ்கோப்பிக் கருவிகளை பயன்படுத்தி நரம்புகளை அழுத்தும் வட்டுப் பகுதி அகற்றப்படுகிறது.
இந்த முறையின் சிறப்பம்சங்கள்:
தசை பாதிப்பு மிகக் குறைவு ரத்த இழப்பு குறைவு அறுவை சிகிச்சைக்குப் பின் வலி குறைவு விரைவான குணமடைதல்
குறைந்த நாட்களில் வீடு திரும்பும் வசதி
மருத்துவமனை நிர்வாகத்தின் தகவலின்படி, காவிரி டெல்டா பிராந்தியத்தில் இம்முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட UBE அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.அவருடன் டாக்டர் அரி மாணிக்கம், மயக்கமருந்து நிபுணர்
டாக்டர் சண்முக ஹரிஹரன்,எலும்பியல் ஆலோசகர் ஆகியோர் குழுவில் இருந்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்களிலேயே நோயாளி மீண்டும் நடக்கத் தொடங்கியதுடன், தற்போது தனது பணிக்கும் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“இரண்டு சிறிய துளைகள் மூலம் செய்யப்படும் இந்த நவீன சிகிச்சை, சிக்கலான முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பான தீர்வாக உள்ளது.தசைகள் பாதிக்கப்படாமல், குறைந்த வலியுடன் நோயாளி விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப முடிகிறது” என்றார்.மேலும்,இந்த வசதி தற்போது டெல்டா பகுதியில் கிடைப்பதால், முதுகுத்தண்டு சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி.பிரவீன்,எலும்பியல் துறைத் தலைவர் டாக்டர் பார்த்திபன் மற்றும் எலும்பியல் ஆலோசகர் டாக்டர் பாலகுருநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.