• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை குறித்து பெண்கள் வெளியே சொல்வதால் தீர்வு கிடைக்குமா?

February 27, 2017 பி.எம். முஹம்மது ஆஷிக்

இன்றைய நாகரிகமாக உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல துறைகளில் முன்னேறியுள்ளனர் என்பதை ஆனந்தத்துடன் ஒப்புக்கொள்ளும் நாம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் தீரவில்லை என்பதை அவமானத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பெண்கள் மீதான சமூகத் தாக்குதல் முடிந்து போய் பெண்கள் இன்று பாதுகாப்பான சூழலில்தான் இருக்கிறார்களா என்பது இன்னும் கேள்விக்குறிதான்.

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது சந்தேகமாக உள்ளது.

இன்றும் பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். குறிப்பாக, அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு நேரும் பிரச்சினைகள் பெரும்பாலும் வெளிவராமலேயே போய்விடுகின்றன. மேலதிகாரிகளின் பார்வையும், பேச்சும் காயப்படுத்துவதால்தான் பணிபுரியும் பெண்கள் அதிக மன அழுத்தம் அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உலகில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. அதில் அவ்வப்போது சில விஷயங்கள் பூதாகரமாக வெடிக்கின்றன. எனினும், சில நாட்களில் அதைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆனால், இன்றும் ஏதே ஒரு வகையில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்பதே வேதனையான விஷயம்.

இருந்தாலும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வது கிடையாது. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். இது குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

அண்மையில் நடிகைகள் பாவனா, வரலட்சுமி போன்றோர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இதனால், இவ்விஷயம் தற்போது பூதாகரம் ஆகியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை குறித்து வெளியே சொன்னால் தீர்வாகுமா…?

அனிஷா ராஜேந்திரன் (வங்கி ஊழியர்)

பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் வெளிப்படையாகச் சொல்வதில் அவர்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சாதாரண பெண்கள் அதை வெளியே சொல்லத் தயங்குவதற்குக் காரணம் உண்டு. வெளியே சொன்னால் தன் பெயருக்கும் தன் பெற்றோருக்கும் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலைதான் காரணம். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வெளியே சொல்ல வேண்டும் என்பதிலும் அப்படி தெரிவிப்பதன் மூலம் நாளை இன்னொரு பெண் பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்கலாம் என்பதும் அவர்களது ஆதங்கமும் நோக்கமும் ஆகும். ஒருவேளை, தனது பெயர் வெளியே வராது, தனக்குப் போதிய பாதுகாப்பு உண்டு என்பது உறுதியாகிவிட்டால், பெண்கள் இத்தகைய கொடுமைகளை வெளியே சொல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால், குற்றமும் குறையும்.

சுஷ்மிதா (ஐடி ஊழியர்)

சமீப காலமாக பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் தனக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து நிச்சயம் சமூகத்தில் வெளிப்படுத்த வேண்டும். மறைப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மாறாக நாமே குற்றவாளிகளைக் காப்பாற்றுவது போல் ஆகி விடும். இதில் வெட்கப்படும் வேதனைப்படவும் ஒன்றுமில்லை. என்னைப் பொறுத்தவரை வெளியே சொல்வதால் எனக்கு மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும்.

மோனிகா மெர்லின் (கல்லூரி மாணவி)

பாலியல் தொல்லை குறித்து பெண்கள் வெளியே சொல்லத் தயங்குவது சுற்றி இருப்பவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தால்தான். இப்படி, காலங்காலமாக மறைத்து வைத்துத்தான் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் தொல்லை குறித்து ஒரு பெண் தைரியமாக புகார் அளிக்கும்போது அவரது பாதுகாப்பு மிகவும் முக்கியம். காரணம், பாதிக்கப்பட்டவர் வெளியே வந்து அந்த பெண்ணை ஏதாவது செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகையால் காவல்துறையும் அரசும் அவர்களது பாதுகாப்பை முதலில் உறுதி செய்ய வேண்டும். அப்போது பெண்களும் தைரியமாக அதனை வெளியே சொல்வார்கள். அது மட்டுமின்றி குற்றவாளிகள் வெளியே வரமுடியாத அளவுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

உமா (ஐடி ஊழியர்)

பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவம் நேர்ந்தால், அதைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் பெண்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதைப் போல், ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும். எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும்.

சிகா கரன் (தொழில் முனைவோர்)

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் குடும்பத்தில் நடந்தாலும் அல்லது வெளியே நடந்தாலும் முதலில் பெண்கள் அதனை தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். எனினும், தற்போது பெண்கள் இதனை வெளியே சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முதலில் அதனை சரிசெய்ய வேண்டும்.
அதைப் போல் சமூகத்தில் இது குறித்து சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைய வேண்டுமானால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்.

ரேச்சல் (கல்லூரி மாணவி)

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை வெளியே சொல்லும்போது அவர்களுக்கு ஏற்படும் தீர்வை விட துயரமே அதிகம். அதனால்தான் பெண்கள் நீரை விழுங்குவதுபோல் மனத்தின் உள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். சிறுவயதிலிருந்தே பெண்களைச் சாதுவானவர்களாகவும் ஆண்களை ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் பெற்றோர் வளர்த்து விடுகிறார்கள். இதனால், பெண்களை அடக்கியே வைக்கும் சூழல் உருவாகிறது. பெண்களுக்கான பாதுகாப்பு முழுக்க முழுக்க ஆண்களிடமே உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். உலகம் என்னதான் மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் குறையவில்லை. இன்னும் கற்காலம் போல்தான் உள்ளது.

வீட்டில் நடக்கும் வன்கொடுமையானாலும் சரி, வெளியில் நடக்கும் வன்கொடுமையானாலும் சரி. மாற்றப்படவேண்டியது மக்களின் சிந்தனைதான் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. குறிப்பாக, பெண்களைப் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக்கொண்டால் மட்டுமே, சமுதாயத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறைவதற்கு சாத்தியம் ஏற்படும்.

முழுமையான விழிப்புணர்வும், புரிதலும் பரிமளிக்கும் மனங்கள் அதிகரிக்கும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் போகின்றன. அத்தகைய சூழலை உருவாக்காமல் மனித நேயம், உரிமை என்றெல்லாம் வாதிட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

மேலும் படிக்க