November 18, 2020
தண்டோரா குழு
செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 84 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறையில் சிதம்பரனாரின் நினைவாக வைக்கப்பட்டுள்ள அவர் இழுத்த செக்கிற்கு பலதரப்பட்ட மக்கள் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஆண்டு தோறும் அதிகப்படியானோர் வருவது வழக்கம். ஆனால் இம்முறை வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோவை மத்திய சிறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு அமைப்பிற்கு நான்கு பேர் மட்டுமே அனுமதி, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கிருமி நாசினிகளை பயன்படுத்திய பின்பே சிதம்பரனாரின் செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.