June 19, 2018
தண்டோரா குழு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?என நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி சுந்தர் அமர்வு தீர்ப்பளித்தது.அதில்,தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர்.இதையடுத்து,வழக்கு 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், தகுதி நீக்க வழக்கு குறித்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பும் விமர்சனங்களுக்குள்ளானது.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன்,நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு.ஆனால் தலைமை நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்தேன்.அவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?
முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்கு பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியை பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
மேலும்,தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள்,அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25-ந் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.