July 5, 2018
தண்டோரா குழு
திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது சோனி நிறுவனம். யூ ட்யூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.
சோனி நிறுவனத்தின் பங்களிப்பில் காளி தி கில்லர் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. போலந்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் லூகாஸ் லெச்வ்ஸ்கி இசையமைத்துள்ள இப்படத்தை டார்க் வாட்டர் புரொடக்ஷன்ஸ் உட்பட நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரித்துள்ளன.
ஜான் மேத்யூஸ் இயக்கத்தில் ரிச்சட் காப்ரல்,கோரினா கால்டரான்,ரியான் டோர்சே,தீனா ப்ரீமேன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சோனி நிறுவனம் இப்படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்வதற்கு பதிலாக,தவறுதலாக 89 நிமிடம் 46 நொடிகள் ஓடக்கூடிய படத்தையே யூ ட்யூபில் வெளியிட்டுள்ளது.படம் வெளியிட்டு 8 மணி நேரத்திற்கு பிறகே தவறை அறிந்து யூ ட்யூபில் இருந்து படத்தை நீக்கியுள்ளது.
சோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ட்ரெயிலருக்கு பதிலாக முழுத்திரைப்படத்தையும் ஆன்லைனில் வெளியிட்டுவிட்டதை நெட்டிசன்கள் வடபோச்சே என கிண்டலடித்து வருகின்றனர்.