June 11, 2018
தண்டோரா குழு
ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்காக 100 கோடி ரூபாயை செலவிட உள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
1950 – 53 காலகட்டத்தில் நிகழ்ந்த கொரிய போருக்குப் பின் எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா – அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பேச்சு நடத்தியது இல்லை. உலகின் சர்வாதிகார சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பல அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி, அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமான சமீபகாலத்தில் உருவெடுத்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவரது செயல்களால் அமெரிக்கா கடும் கோபத்திற்கு ஆளானதுடன், 3ஆம் உலகப்போர் ஏற்படுமோ என உலக நாடுகள் பதற்றம் அடைந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இருநாட்டின் தலைவர்களும் சந்திந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படி 60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்தித்துப் பேச உள்ளனர். 2011 ஆம் ஆண்டு வடகொரிய தலைவராக பதவியேற்ற பின், சீனா தவிர்த்து முதன்முறையாக அவர் வெளிநாடு வந்துள்ளார்.அவரைச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong கூறுகையில்,
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டும் ஒரு சில நாடுகளுள் முக்கியமானதாக சிங்கப்பூர் கருதப்படுவதாலேயே இங்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு
நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அமைதிக்கு நன்மை பயக்கும் என்பதால், முற்றிலும் எங்கள் சுய விருப்பத்தின் பேரிலே, இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. சுமார் 2500 பத்திரிக்கையாளர்கள் இந்நிகழ்வு குறித்து செய்தி சேகரிப்பதற்காக இங்கு வந்துள்ளனர். மிகவும் முக்கியமான இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவாகும் என்றும், அதில் பாதியளவு பாதுகாப்புக்காக மட்டுமே செலவிடப்படும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.