February 28, 2020
டெல்லி கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்து, கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டங்களின் போது, கலவரம் வெடித்தது. இதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அக்கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கண்டித்து, கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டும் பாஜக தலைவர்கள் மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.