December 14, 2020
தண்டோரா குழு
வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கோவையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
டெல்லியில் விவசாயிகள் போர்வையில் போராடக் கூடியவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது.டெல்லியில் போராடக் கூடியவர்கள் விவசாயிகள் இல்லை. இடைத்தரகர்கள் மட்டுமே.நடைபெற்றுவரும் போராட்டங்களில் அந்நிய சக்திகளின் தாக்கம் அதிகம் இருக்கிறது.மிகப்பெரிய இந்திய சந்தை மதிப்பை குலைக்க முயற்சித்து
வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன்கள் முறையாக விவசாயிகளை சென்று சேரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பில் வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் பேரணி நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் விவசாயிகளிடையே வேளாண் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரைவில் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.