April 15, 2017
தண்டோரா குழு
டெல்லியில் தமிழக விவசாயிகள் 33வது நாளாக இன்று, தாலியறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கவனத்தை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் நேற்று பெண் வேடமிட்டு போராட்டம் நடத்தினர். இன்று தாலி கட்டி பின்னர் அதை அறுக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.