July 2, 2018
தண்டோரா குழு
டில்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு டில்லியின் புராரி பகுதியில் குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இருந்த வீடு ஒன்று திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த பக்கத்தில் கடை வைத்திருப்பவர்,போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து,போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(77)தரையில் படுத்தவாறு இறந்திருந்தார்.மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர்.10 பேர் கண்களையும்,வாயையும் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது,நாராயண் தேவி குடும்பத்தார்,வித்தியாசமான வழிபாட்டு முறையை கடைப்பிடித்துள்ளனர், அதற்காகவே வீட்டுக்குள் சிறிய கோயிலை கட்டி வைத்து வழிபாடு செய்துள்ளனர்.இப்போது கடவுளிடம் சென்று விட இவ்வாறு தற்கொலையை செய்து உள்ளனர் என்று தெரிகிறது.
மேலும்,உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த டைரி ஒன்றில் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்.அதில் மாந்திரீகம் போன்ற ஆன்மிக பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அனைவரும் ஒரே மாதிரி கைகள்,கண்கள்,வாய் கட்டப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆன்மிக பயிற்சி காரணமாக இவர்கள் கூட்டாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.அவர்களின் வழிபாடு முறையானது மிகவும் புதிராகவும்,அதிக மூடநம்பிக்கை கொண்டதாகவும் இருந்துள்ளது.இதனால்,சொர்கத்தை அடையும் வழி என்று மொத்தமாக நள்ளிரவு தற்கொலை செய்துள்ளனர் என கூறப்படுகிறது.
ஆனால், மறுபுறம் நாராயண் தேவியின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள் என்பதால் மூடநம்பிக்கையை எப்படி பின் தொடர்ந்தார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.அதைபோல் சிசிடிவி காட்சியில் வீட்டிற்கு யாரும் வந்து சென்றதற்கான பதிவுகள் ஏதும் இல்லை.எனினும்,இது தற்கொலையா… கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.