June 26, 2021
தண்டோரா குழு
கொரோனா ஊரடங்கால் கோவை உள்பட 11 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதும், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் கஞ்சா, சாராயம், வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக பயன்படுத்துதல் போன்றவை அதிகரித்து வருகிறது.கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவையில் போதைக்காக வலி நிவாரணி மற்றும் மயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்தவர்களில் ஒருவர் சொந்தமாக மருந்தகம் வைத்து இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா கூறியதாவது:
மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை தண்ணீரில் கரைத்து சிலர் ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு அடிமையாகின்றனர் இதுபோன்று நரம்புகளில் செலுத்துவதால் உயிருக்கே ஆபத்தாக முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சொந்தமாக மருந்தகம் வைத்துள்ளார்.
விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. எனவே மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும்போது முறையாக டாக்டர்களின் பரிந்துரை சீட்டு உள்ளதா? என கேட்டு வழங்க வேண்டும். இல்லையென்றால் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது.
மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி மாத்திரைகளை விற்றால் சம்பந்தப்பட்ட மருந்தக விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.