October 3, 2025
தண்டோரா குழு
இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) சரக்கு மற்றும் சேவை வரி கட்டணங்களை வசூலிக்கும் ஒரு ஏஜென்சி வங்கியாக டிபிஎஸ் வங்கி இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து இந்த ஒப்புதலைப் பெறும் இந்தியாவில் முழு உரிமமுள்ள ஒரே துணை நிறுவனம் என்ற கெளரவத்தை டிபிஎஸ் வங்கி இந்தியாவுக்கு இந்த அங்கீகாரம், பெற்றுத் தந்துள்ளது. இப்போது தனது டிஜிட்டல் வங்கித் தளமான டிபிஎஸ் ஐடியல் ஐ பயன்படுத்தி வாடிக்கையாளர் நிறுவனங்கள் தங்களுடைய ஜிஎஸ்டி கட்டணங்களை உடனடியாகச் செலுத்த டிபிஎஸ் வங்கி இந்தியா உதவுகிறது.
இந்த தளத்தில், வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி கட்டண அறிவிக்கையைப் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும், நிகழ்நேர பரிவர்த்தனை நிலை குறித்த புதிய தகவல்களைப் பெறமுடியும். மேலும் இதற்கான சிறப்பு வாடிக்கையாளர் சேவை வசதி மூலம் தங்களது ஜிஎஸ்டி கட்டணம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும். டிபிஎஸ் ஐடியல் டிஜிட்டல் வங்கித் தளம் மூலம் செலுத்தும் கட்டணங்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தைப் பொறுத்து நெஃப்ட்/ ஆர்டிஜிஎஸ்முறையிலோ அல்லது வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள கெளண்டர் மூலமாகவும் ஜிஎஸ்டி கட்டணங்களைச் செலுத்தலாம்.
இந்த வசதி, வாடிக்கையாளர்கள் தங்களது வணிக மற்றும் சட்டப்பூர்வ செயல்பாடுகள் குறித்த கட்டாயக் கட்டணங்களையும் ஒட்டுமொத்தமாக செலுத்த உதவுவதோடு, மிகவும் வலுவான டிஜிட்டல் வங்கி தளத்தின் மூலம் எளிய முறையில் ஜிஎஸ்டி கட்டணங்களைத் தொடர்ந்து செலுத்துவதை நெறிப்படுத்தவும் உதவும்.
டிபிஎஸ் வங்கி இந்தியாவின் க்ளோபல் ட்ரான்ஸ்சாக்ஷன் சர்வீசஸ், கார்பொரேட் பேங்கிங் – ஃபைனான்ஷியல் இன்ஸ்டிடியூஷன்ஸ் & எஸ்.எம்.இ. பிரிவின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் கண்ட்ரி ஹெட் பொறுப்பு வகிக்கும் திவ்யேஷ் தலால் கூறுகையில்,
“ஜிஎஸ்டி-க்கு ஏற்ற வகையில் வங்கி நடவடிக்கைகள் இருப்பது வர்த்தக நிறுவனங்களுக்கு முக்கியமான தேவையாகும். டிபிஎஸ் வங்கி இந்தியாவைப் பொறுத்தவரையில், ஜிஎஸ்டி தொடர்பான செயல்முறையை தடையற்றதாகவும், உடனடி தீர்வளிக்கும் முறையாகவும் மாற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். டிபிஎஸ் ஐடியல் தளத்திற்குள் ஜிஎஸ்டி கட்டணங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், கட்டண செயலாக்கத்தின் நிகழ்நேர தகவல், தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் துரிதமான செயல்பாட்டு வசதியை அளிக்கும் ஒரு பாதுகாப்பான, செயலி மற்றும் வலைத்தளத்தை இப்போது வணிக நிறுவனங்களுக்கு வழங்குகிறோம்.
இதன்மூலம் வணிக நிறுவனங்கள் தங்களது சட்டப்பூர்வ கடமைகளை திறம்பட நிர்வகிக்க உதவும் புத்திசாலித்தனமான, சூழல் சார்ந்த தீர்வுகளை வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.” என்றார்.
டிபிஎஸ் வங்கி இந்தியா, தனது மொபைல் செயலி மற்றும் வலைத்தளம் அடிப்படையிலான டிஜிட்டல் வங்கி தளத்தின் மூலம் வணிகங்களுக்கான ஜிஎஸ்டி கட்டணங்களை நெறிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு, செலுத்தப்பட்ட நிலையைத் தெரிவிக்கும் உடனடி ஒப்புதல்கள், நிகழ்நேர பரிவர்த்தனை கண்காணிப்பு வசதி மற்றும் செலுத்திய ஒட்டுமொத்த ஜிஎஸ்டி கட்டணங்கள் பற்றிய ஒருங்கிணைந்த தகவல்கள் மூலம் பலனடையமுடியும்.
இந்த வசதிகளின் மூலம் வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி கட்டணம் தொடர்பான கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள முடிவதால், நிர்ணயிக்க காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தாமல் தவற விடுதல், அபராதங்கள் கட்ட வேண்டிய சூழலுக்கு உள்ளாகுதல் போன்ற அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.மிகச் சிறப்பான துல்லியம், வெளிப்படைத்தன்மை, தங்களது கட்டணம் தொடர்பான முழுத்தகவல்கள் மற்றும் கட்டண செலுத்துவதில் வாடிக்கையாளர் வசம் கட்டுப்பாடு போன்ற அம்சங்களின் மூலம், டிபிஎஸ் வங்கி இந்தியா வணிக நிறுவனங்கள் தங்களது ஜிஎஸ்டி கடமைகளை நிறைவேற்ற உதவுகிறது.