September 12, 2025
தண்டோரா குழு
கோவை ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேச பள்ளி சார்பில் சர்வதேச தொண்டு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி கோவில்மேடு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் உள்ள நூலகத்திற்கு புத்தகம் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிக்குழந்தைகள் படித்து பயனுறும் வகையில் மிகச்சிறந்த புத்தங்கங்களை ஜிஆர்ஜி நிர்வாகத்தின் தாளாளர் டாக்டர். நந்தினி ரங்கசாமி அவர்களின் மேலான ஆதரவுடனும் ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளியின் முதல்வர் உமா வழங்க,மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர் வேணுகா மெய்யன்பன் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து ஜிஆர்ஜி மார்டன் ஸ்காலர்ஸ் சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மாணவர்களுக்கு நூலகம் என்பது படிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதற்கு எங்களது நிறுவனம் மற்றும் எங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் உதவியோடு இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் சமூக சிந்தனை,சமூக அக்கறை வளர்க்கும் நோக்கத்தில் இத்திட்டம் தொடர்ந்து செய்து வருகின்றோம். இதன் மூலமாக மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை தினம் தோறும் கொண்டு வர வேண்டும்.
மேலும் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு அடித்தளமாக அமையும் என்றார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளியின் மாணவ மாணவிகளும்,ஆசிரியர்களும் பங்குபெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும், இப்பள்ளிக்கு புத்தகங்களை ஒரு தொடர்நிகழ்வாக இவ்வாண்டு முழுதும் வழங்கிட ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளி முன்வந்துள்ளது. இப்பள்ளியின் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இதில் ஆர்வமுடன் நூல்களை வழங்கி பேருதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஜிஆர்ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் சர்வதேசப்பள்ளி மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்தனர்.