August 7, 2018
தண்டோரா குழு
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராக்கெட் ராஜாவை அழைத்து செல்ல கோவையில் குவிந்த ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் நாடார் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர். போராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இவரை, கடந்த மே 6ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி, ராக்கெட் ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ராக்கெட் ராஜாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை, தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மும்பையில் தங்கி இருந்து அங்குள்ள கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, சிறையில் இருந்த ராக்கெட் ராஜாவை அழைத்து செல்ல, அவரது ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்ட சொகுசு கார்களில் கோவை சிறைசாலை முன்பு குவிந்தனர். மாலை 6.15 மணியளவில் அவர் சிறையில் இருந்து கூட்டிவரப்பட்டார். அவருக்கு நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி நாடார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராக்கெட் ராஜாவுக்கு ஆள் உயர மாலை அணிவித்து, வீர வாள் பரிசாக அளித்தனர். தொடர்ந்து அவர் ஆதரவாளர்கள் அசைத்து விட்டு விமான நிலையம் புறப்பட்டார். நிகழ்ச்சியில் மின்னல் ஸ்டீபன், நாடார் மக்கள் சக்தி கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் அவினாஷ், ஆனைகுடி சத்தியன்பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.