December 23, 2020
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர்கள் சங்கம் (காட்மா) பொதுக்குழு கூட்டம் பீளமேடு பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் காட்மா தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் காட்மா தலைவர் சிவக்குமார் கூறியதாவது:
மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் மூடப்பட்டுள்ள செயில் கிடங்கை மீண்டும் திறக்க வேண்டும்.அதன் மூலம் மூலப்பொருட்களை தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் கோவையில் மூலப்பொருள் வங்கி அமைத்து நியாயமான விலையில் மூலப்பொருட்களை வழங்க வேண்டும்.
ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். கோவை அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்து தர வேண்டும். இதுவரை வங்கிகளில் கடன் பெறாத தொழில்முனைவோர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் முத்ரா திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்க வேண்டும். குறுந்தொழில் முனைவோர்களுக்கு காப்பீட்டு திட்டம், ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு, ஒய்வுக்கு பின் ஒய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு சிவக்குமார் கூறினார்.