February 2, 2018
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு போராட்டங்களை முன்நின்று நடத்திய நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் இறுதிகட்டத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் இரண்டாம் கட்டமாகப், மூன்றாவது நாளான இன்றும் விசாரணை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
கோவையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 12 பேரிடம் விசாரணை நடந்துள்ளதாகவும் , ஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனாதபதி,ஹிப் ஆப் தமிழா ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.
மேலும் , தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு போராட்டத்தின் போது முன்நின்று நடத்திய, வாக்குறுதிகள் கொடுத்த சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கின்றனர். கலவரத்தின் போது சென்னையில் குடிசைகளுக்கு தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என காவல் துறை அதிகாரிகள் விசாரணை ஆணையத்தில் தெரிவிப்பதாக கூறினார்.
கலவரத்தின் போது தாக்குதல்களிலும் , தவறான செயல்களிலும் ஈடுபட்ட காவலர்களை , காவல்துறையின் உயர் அதிகாரிகள் மறைப்பது போல் தெரிகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தனக்கும் அவ்வாறு தான் தோன்றுவதாக ராஜேஸ்வரன் கூறினார்.