November 19, 2021
தண்டோரா குழு
ஒன்றிய அரசின் நடவடிக்கையால்
செயற்கை பஞ்சின் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது
சைமா தலைவர் கூறியுள்ளார்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தலைவர் ரவி சாம் கூறியிருப்பதாவது:
பருத்தி மற்றும் நூலை தவிர, இதர ஜவுளி பொருட்கள் அனைத்தையும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரிக்குள் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலமாக ஜவுளி துறை நீண்ட காலமாக சந்தித்து வந்த உள்ளீட்டு வரி சிக்கலை ஒன்றிய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நடவடிக்கையால் செயற்கை பஞ்சின் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. ஜவுளி பொருட்களின் விலையும் குறையும். வரும் ஆண்டுகளில் செயற்கை பஞ்சின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்கள் தான் நாட்டின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும்.பருத்தி மற்றும் பருத்தி நூலுக்கான ஜி.எஸ்.டி. வரி விகித்தை 5 சதவீதத்திலேயே தக்க வைத்திருப்பது பருத்தி விவசாயிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும்.
பஞ்சு, நூல், சாயமிடுதல், துணி பதனிடுதல், பிரிண்டிங் கூலி வேலைகளுக்கு வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளதை பொறுத்தவரை, சாயம் மற்றும் இதர ரசாயன பொருட்களின் வரி 18 சதவீதமாக உள்ளதால் அதிகளவில் உள்ளீட்டு வரி பிரச்சினை இருந்து வந்தது. 12 சதவீத வரியினால் ஜவுளி பதனிடும் கூலித் தொழிலின் உள்ளீட்டு வரி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது.
அதே நேரத்தில் ஆடைகள் மற்றும் துணிகள் மீது 12 சதவீத வரி விதிப்பு என்பது சாமானிய மக்களுக்கு, குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை பாதிக்கும். எனவே ரூ.1000-க்கு கீழ் மதிப்புள்ள ஆடைகளுக்கு 5 சதவீத வரி விதிப்பை தக்க வைக்க வேண்டும். துணி மற்றும் ஆடை நிலைகளில் வரிகளை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களுக்கு மூலதன சுமையை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.