April 10, 2018
தண்டோரா குழு
அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வழியாக சிஎஸ்கே டி சர்ட் அணிந்து சென்ற ரசிகர்களை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி நடத்த கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிஎஸ்கே யூனிஃபார்ம், டிக்கெட் உள்ளிட்டவற்றை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது, ஐபிஎல் போட்டியை காண சிஎஸ்கே டி- சர்ட்டுடன் வந்த ரசிகர்களை போராட்டகாரர்கள் தாக்கியுள்ளனர்.ஆடையை கழட்டி எறிந்துவிட்டு ஓடுமாறு கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர்.
எனினும், சிஎஸ்கே ரசிகர்களை தாக்கியது போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் நுழைந்த வேறு ஏதேனும் கும்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.