• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையை போல் கோவையிலும் கார் ஆம்புலன்ஸ் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியது தான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கோவையில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட இன்று 800 குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்றார்.

தொழில் நிறுவனங்கள் நாளை முதல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் என எச்சரித்த அவர், கொரோனா பாதித்த நோயாளிகள் ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வர படுவதால் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக கூறினார்.

சென்னையில் உள்ளதுபோல கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை கோவையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கோவையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று நிலையில், அங்கு பணிபுரியும் நபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் 10 நாட்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் வீணடிக்காமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளதாக குற்றம்சாட்டிய மா சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்தொற்றுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, மருத்துவமனைகள் சம்பாதிப்பதற்கான நேரம் இதுவல்ல, மனசாட்சியின் படி மருத்துவமனை நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க