March 9, 2018
தண்டோரா குழு
சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி. இன்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அஸ்வினியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையில், கத்தியால் குத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன ?
அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், தண்ணீர் கேன் பிசினஸ் செய்துள்ளார். அவர் அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், அழகேசனை கைது செய்திருந்தனர்.
பின்னர், அழகேசன் தொல்லையால் பாதிக்கப்பட்டு, மதுரவாயலை காலி செய்த அஸ்வினி, ஜாபர்கான்பேட்டையில் தங்கியிருந்து கல்லூரிக்கு வந்து படித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன், பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து அஸ்வினியை குத்தி கொலை செய்துள்ளான்.