December 31, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மெய்நிகர் வகுப்பறையினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்ததாவது:
இப்பள்ளியில் மெய்நிகர் வகுப்பு துவங்கப்படுவது சிறப்பான நிகழ்வாகும். இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர் தொழில் நுட்பத்துடன் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இக்கருவியில் பாடப்பொருள் சார்ந்த ஒளிப்பதிவுகள், பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது. அறிவியலில் மனித உடல் உள்ளுறுப்புகள், தாவர விலங்கு செல்களின் அமைப்பு, மனித மூளையின் பாகங்கள் என அனைத்து பாடங்களும் நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடப்பொருளானது மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.