November 25, 2021
தண்டோரா குழு
சூலூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் நீண்டகாலமால எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே, திமுக ஆட்சி அமைந்ததும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுவதாக தெரியவருகிறது.இந்த சூழலில் கள்ளப்பாளையம் கிராமப்பகுதி மக்கள் இன்று அப்பகுதியில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதை அறிந்த சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வி.பி கந்தசாமி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.மேலும், அவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமையாமல் பார்த்துக் கொண்டோம். ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் இங்கு சில சமூக விரோதிகள் டாஸ்மாக் கடையை அமைக்க திட்டமிடுகின்றனர்.
எனவே கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் இந்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.” என்றார்.