March 12, 2018
தண்டோரா குழு
குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக கேரள அரசு வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் டிரக்கிங் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கியுள்ளனர். இதில், 9 பேர் உடல்கருகி பலியானார்கள் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், கேரள அரசு இன்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கேரள வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. மலை ஏற்றம் செல்பவர்கள், இயற்கை பயணத்தை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் இனி அனுமதி இல்லாமல் கேரள வனப்பகுதிக்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.