August 19, 2021
தண்டோரா குழு
கோயம்புத்தூர் ஆகிய மார்க்கெட்களில், பயோடீசல் பெயரில் விற்கப்படும் போலியான வாகன எரிபொருள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் வாகனங்களையும் சேதப்படுத்துகிறது.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் R. சிதம்பரம் கூறுகையில்,
தமிழகத்தில் பயோடீசல் என்கிற பெயரில், மோசமான, போலியான வாகன எரிபொருளை விற்பனை செய்யும் சில சப்ளையர்கள், சமீப காலத்தில் பெருகி வருவது தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்டோர் ரகசியமான முறையில் பெயர்ப்பலகை வைக்கப்படாத கோடவுன்களிலிருந்து போலி எரிபொருளை விநியோகித்து வருகிறார்கள்.
இத்தகைய செயல்பாடுகள், இந்தியாவில் BS-VI தூய்மையான மோட்டார் வாகன எரிபொருள்களை வழங்கி சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், BIS 15607 / 2016 (B-100) வரையறைகளின் படியான, சரியான பயோ டீசலை மாநில அரசின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்று மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். பயோடீசல் சேமிப்பு மற்றும் விற்பனை செய்யப்படும் இடமானது Class-B தர நிர்ணய உரிமங்களை அரசிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
இந்த போலி எரிபொருளை, பயனாளர்களான சாலை போக்குவரத்தாளர்கள் மற்றும் பிற தொழில் துறையினருக்கு பயோடீசல் என்ற பெயரில் நேரடியாக விற்பனை செய்வது சட்ட விரோதம் மட்டுமல்லாது, தமிழ்நாடு அரசின் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய செயலும் ஆகும். தற்போது இயங்கி வரும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் பயோ டீசல் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிய வருகிறது.
தேசிய பயோஎரிபொருள் கொள்கை (2018)-ன் படி பெட்ரோல் பம்புகளில் விற்கப்படும் டீசலில் 7% வரை சேர்ப்பதற்காக மட்டுமே பயோடீசலின் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது.சேலம், நாமக்கல்,சங்ககிரி,தூத்துக்குடி,ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மார்க்கெட்களில்,இந்த போலி தயாரிப்புகள்,சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் வாகனங்களையும் சேதப்படுத்துகிறது.மேலும் போலி தயாரிப்புகளால் பொது மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதுடன்,அரசுக்கும் பெருமளவிலான வருவாய் இழப்பு ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார்.