March 4, 2021
தண்டோரா குழு
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு சங்க தலைவர் மணிராஜ் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எங்கள் குறைகளை நேரடியாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எடுத்துரைக்கவே இம்முறை தேர்தல் போட்டியிடுவதாகவும் எங்கள் குறைகளை மக்கள்பிரதிநிதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் எடுத்து செல்லவில்லை என்று தெரிவித்தார்.கொரோனா காலத்தில் பல பிரச்சினைகளை சந்தித்த நாங்கள் மக்கள்பிரதிநிதிகளிடம் பல முறை பேசியும் எவ்வித உதவிகளும் எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தார். வெற்றிவாய்ப்பு சிங்காநல்லூர் தொகுதியில் அதிகமாக இருப்பதனால் தற்பொழுது அங்கு போட்டியிட இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்க்கவில்லை என்று தெரிவித்த அவர் எங்கள் குறைகளை அரசுகளுக்கு சுட்டிக் காட்டவே விரும்புவதாக தெரிவித்தார். தொழில் நகரமாக உள்ள இந்த கோவை மாவட்டம் தற்பொழுது நழிவடைந்து வருகிறது. மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்கள் பிரச்சினைகள் குறித்து அரசுகளுக்கு அழுத்தங்கள் தருவதில்லை. அதுமட்டுமின்றி டெண்டர் எடுக்கின்ற பொழுது பெருநிறுவனங்களுக்கு தான் 90% ஒதுக்குகிறார்கள் என்றும் எங்களை புறக்கணிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
நாங்கள் பல ஆண்டுகளாக கோவையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மோட்டார் பம்ப்செட் டெஸ்டிங் லேப் ஒன்றை பூரணமைத்து தரவேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் தொழில்துறை அமைச்சர் ஆகியோரை கேட்டு வருகிறோம் ஆனால் இன்றுவரை அந்த வசதி செய்து தரப்படவில்லை என்று கூறினார். மேலும் சுய தொழில் வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுமாறுவதாக கூறிய அவர் சுயதொழில் வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கினால் தான் நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும் என்று தெரிவித்தார். எனவே எங்கள் பிரச்சினைகளை நேரடியாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கவும் மக்கள் பிரச்சனைகளை தெரிவிக்கவும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.