July 4, 2018
தண்டோரா குழு
கோவை கிருஷ்ணாநகர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து ஒன்றரை டன் குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயற்சித்த குடோன் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் அருகே கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த 2ம் தேதி ஒரு வீட்டில் ஒன்றரை டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து அந்த வீட்டினை சீல் வைத்த அதிகாரிகள்,மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த ஷர்வன்குமார் என்ற வடமாநில இளைஞர் தப்பியோடிய நிலையில், வீட்டின் உரிமையாளரிடம்,குட்கா வரவு மற்றும் விற்பனை உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ஒரு கும்பல் சீல் வைக்கப்பட்ட வீட்டில் நுழைந்து குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயற்சித்துள்ளது.அப்போது அவ்வழியே ரோந்து பணிக்காக வந்த செல்வபுரம் காவல் துறையினர் அக்கும்பலை பிடித்து விசாரித்துள்ளது.அதில் அசோக் என்பவர் குடோன் உரிமையாளர் என்பதும்,காசிவிசுவநாதன்,சலீம்,அஸ்ரப்,சுரேஷ்,பாபு ஆகியோர் சுமை துக்கும் பணியாளர்கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் குட்கா குடோன் உரிமையாளர் அசோக்கினை கைது செய்த காவல் துறையினர்,மற்ற 5 பேரை விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.