June 27, 2018
தண்டோரா குழு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வந்த காரணத்தினால் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இதுமட்டுமின்றி கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் வழங்கி இருந்தது.இந்நிலையில்,இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது இவ்வழக்கில் ஆஜரான ஐஜி பொன்மாணிக்கவேல் சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை தனக்கு தெரியாமலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலும் அரசு பணியிட மாற்றம் செய்வதாகவும்,நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவுற்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
அதற்கு அரசு தரப்பில் கோயில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி மகாதேவன்,கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.
மேலும்,நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் பணியிட மாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
தனியார் பொறுப்பில் இருக்கும் கோயில் சிலைகள் பாதுகாப்பாக இருக்கும் போது அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் சிலைகள் மட்டும் எப்படி திருட்டு போகிறது.இதே நிலை நீடித்தால் பல சிலைகள் தனியார் வசம் செல்லும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் வேதனை தெரிவித்தார்.பழமையான கோயில்களின் சிலைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.